சென்னை: பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான நீதியை நிலைநாட்டும் திராவிட மாடல் பயணத்துக்கு மேலும் ஓர் அங்கீகாரமாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது,” என்று கூறியுள்ளார்.
முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்துக்கான 3 விழுக்காடு உள்ஒதுக்கீட்டை மறைந்த முதல்வர் கருணாநிதி கொடுக்க, அதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம். இந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் இப்போது உறுதி செய்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.
மாநிலங்களில் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலினப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதமாக பஞ்சாப் மாநில அரசு சட்டம் கொண்டு வந்தது. இதேபோல் தமிழகத்தில் 2009ல் அருந்ததி இன மக்களுக்கு இடஒதுக்கீடு அளித்து பஞ்சாப் அரசு சட்டம் இயற்றியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது ஆறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
அதில், “பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்குத் தடை இல்லை. மிகவும் பின்தங்கியோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் மாநில அரசு கொண்டுவந்த சட்டம் செல்லுபடியாகும். அரசியல் சாசன சட்டத்தின் 14வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை,” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், பட்டியலினத்தவருக்கு சமூகநீதி வழங்கும் வகையிலும், மாநில அரசுகளின் உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும் உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்


