தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலவச வேட்டி, சேலை ஊழல் தொடரக்கூடாது: அண்ணாமலை

2 mins read
f8ff7edb-08dd-4ab2-9ae7-bdaa08da2a06
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் இலவச வேட்டி, சேலை வழங்குவதில் ஊழல் செய்ய வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தமிழக அரசின் சார்பில் நூல் கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டு, விசைத்தறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கப்படுவது வழக்கம்.

“பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே, இந்த வேட்டி சேலைகள் பொதுமக்களுக்கும் வழங்கப்படும்.

“ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல் மற்றும் உற்பத்தியாளர்களிடம் தரகுத் தொகை (கமிஷன்) என முறைகேடுகள் பெருக ஆரம்பித்ததோடு, நூல் கொள்முதலில் காரணமில்லாத காலதாமதமும் ஏற்படத் தொடங்கியது.

“கடந்த மூன்று ஆண்டுகளாக, ஜூன் மாதத்தில் நடைபெற வேண்டிய கொள்முதல் பணிகள், அக்டோபர் மாதம் வரை தள்ளிப்போனதும் இதனால், பொதுமக்களுக்கு, பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலை பிப்ரவரி மாதம் வரை தள்ளிப் போனதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

“குறிப்பாக, இந்தத் திட்டத்தில், கைத்தறித் துறை அமைச்சர் காந்தி செய்த ஊழல் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில் தமிழக பாஜக சார்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

“அதுபோக, இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களிடம், 10 விழுக்காடு தரகுத் தொகை வாங்குவதும் திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

“கடந்த ஆண்டைப்போல, இந்த ஆண்டும் ஊழல் செய்வதற்காகவும் தரகுத் தொகை வாங்குவதற்காகவும் விசைத்தறியாளர்கள் நலனை அடகு வைக்கும் எண்ணம் திமுக அரசுக்கு இருந்தால், தமிழக பாஜக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று எச்சரிக்கிறேன்,” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்