நாமக்கல்: கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலா்க் கண்காட்சி, அரசுத் துறைகளின் பணி விளக்கக் கண்காட்சி ஆகியன வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) காலை 10 மணிக்குத் தொடங்கியது. இதனை, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஒவ்வோர் ஆண்டும் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருவது போலவே, இவ்வாண்டும் கொல்லிமலை செம்மேடு வல்வில் ஓரி அரங்கில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலர்க் கண்காட்சி தொடக்கவிழா ஆகியன நடைபெற்றன.
மலர்க் கண்காட்சியைச் சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பொன்னுசாமி தொடக்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் வல்வில் ஓரியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். கொல்லிமலை பழங்குடியின மக்களின் சேர்வை ஆட்டமும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
50,000 ரோஜாக்களால் மலர்க் கண்காட்சி
கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் மலர்க் கண்காட்சியும் மருத்துவப் பயிர்கள் கண்காட்சியும் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி, 50,000 ரோஜாக்களால் யானை, ஆக்டோபஸ், நண்டு, மீன், சிப்பி, காதல் சின்னம், பட்டாம்பூச்சி, தானியங்களால் முதல்வர், காய்கறிகளால் பட்டாம்பூச்சி, மயில் போன்றவை வடிவமைக்கப் பட்டிருந்தன. மேலும், 20,000 மலர்களைக்கொண்டு பல்வேறு வகை அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன.