நம்பகமற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பா.ம.க

நம்பகமற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பா.ம.க

2 mins read
ffe73a67-a108-4e64-9121-26626acd1059
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: இந்திய மக்களிடையே நம்பகத் தன்மையை இழந்துவிட்ட உயர்கல்வித் தகுதித் தேர்வான நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இருமுறை 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாத ஒரு மாணவி நீட் தேர்வில் மட்டும் 98% மதிப்பெண் பெற்று தேர்ச்சியானது எப்படி? இவ்வாறான தேர்வு நமக்குத் தேவையா என்று திரு ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து திரு ராமதாஸ் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வில் 720க்கு 705 (98%) மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவி ஒருவர், அம்மாநிலத் தேர்வு வாரியம் நடத்திய 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை இரு முறை எழுதியும் வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்துள்ளார். நீட் தேர்வு மாணவர்களின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வருவதில்லை என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது என்று கூறியுள்ளார்.

அந்த மாணவிக்கு 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் கிடைத்த மதிப்பெண்கள்: வேதியியலில் 31, இயற்பியலில் 21 மதிப்பெண்களே கிடைத்திருந்தது. பின்னர் அவர் இரண்டாவது முறையாக அந்தப் பாடங்களுக்கான தேர்வுகளை மட்டும் எழுதினார். அதில் அவர் வேதியியலில் மட்டும் 33 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். ஆனால், இயற்பியல் பாடத்தில் முன்பு கிடைத்ததைவிட ஒரு மதிப்பெண் கூடுதலாக 22 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

மிகவும் எளிதான 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 33 மதிப்பெண்களைக் கூட எடுக்க முடியாத ஒரு மாணவியால் நீட் தேர்வில் 98% விழுக்காடு மதிப்பெண் எடுக்க முடியும் என்றால் நீட் தேர்வை நடத்துவதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நீட் தேர்வு மாணவர்களின் திறனை அளவிடுவதற்கான சரியான அளவுகோல் அல்ல, பயிற்சி மையங்களை உருவாக்கி கோடிக்கணக்கில் பணம் ஈட்டுவதற்கு மட்டும் தான் நீட் தேர்வு உதவும்,” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

நீட் தேர்வு மாணவர்களின் திறனை அளவிடுவதற்கான சரியான அளவுகோல் அல்ல, என்பது வினாத்தாள் கசிவு, காப்பியடித்தல் உள்ளிட்ட பல முறைகேடுகளால் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்