திருச்சி: திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையில் சனிக்கிழமை ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாட எண்ணற்ற மக்கள் குவிந்தனர்.
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம் என்பதால், மாதம் முழுவதுமே அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்தவகையில் ஆடி மாதம் 18ஆம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளை ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நீர்நிலைகளில் பெண்கள் ஆற்றங்கரையில் கூடி, அரிசி, பழங்கள், பனைஓலை கருகமணி, மஞ்சள், மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து காவிரித் தாய்க்கு படையலிட்டனர்.
திருச்சி திருவரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன், கீதாபுரம், கருட மண்டபம், சிந்தாமணி உள்ளிட்ட காவிரி ஆற்றின் படித்துறைகளில் ஏராளமான பெண்கள் கூடி வழிபாடு நடத்தினர். ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் மாவட்டம் முழுவதும் மக்கள் வழிபாடு நடத்த 55 இடங்களை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அந்த இடங்களில் பாதுகாப்புக்காக காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் பணியில் அமர்த்தப்பட்டனர்.