ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரத்தில் பயணிகள் பரிதவிப்பு

2 mins read
355865b2-55b4-4490-89da-2e19ad4e0d17
வெறிச்சோடிக் கிடக்கும் தாம்பரம் ரயில் நிலையம். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: சென்னையை அடுத்த தாம்பரத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்கள் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அளவில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அகற்றிவிட்டு 120 முதல் 130 கிலோமீட்டர் வேகத்தில் விரைவு ரயில்கள் செல்லும் வகையில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் ஏற்கெனவே ஒன்பது நடைமேடைகள் உள்ள நிலையில் கூடுதலாக இரண்டு நடைமேடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால், தாம்பரம் ரயில் நிலையம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) மூடப்பட்டது. இன்னும் பத்து நாள்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 14 வரை அந்த நிலையத்தில் மின்சார ரயில் சேவை நிறுத்தி வைக்கப்படுகிறது.

செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை இடையே காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை 63 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் விரைவு ரயில்கள் அனைத்தும் செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

பேருந்துகளில் பயணம் செய்ய தாம்பரம், பல்லாவரம் மற்றும் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையங்களில் அதிகப்படியான பயணிகள் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அதனால், 70 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு 20 பேருந்துகளும் கூடுவாஞ்சேரிக்கு 30 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

அதேபோல் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து தி.நகர் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகள் சனிக்கிழமை முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

பல்லாவரம்,தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட ஜிஎஸ்டி சாலைகளில் சுமார் 175 காவலர்கள் போக்குவரத்தைச் சரிசெய்தும் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்