தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு

2 mins read
381ea4e5-9f3e-4809-a139-a732281c6c44
கரூர் மகாதானபுரம், மகாலட்சுமி அம்மன் கோயில் விழாவில் தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை (ஆகஸ்ட் 4) நடைபெற்றது. - படம்: தமிழக ஊடகம்

கரூர்: மேட்டு மகாதானபுரம் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேத்திக்கடன் நிறைவேற்றினர்.

கரூர் அடுத்த மேட்டு மகாதானபுரத்தில் உள்ள இந்தக் கோயிலை கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் கிருஷ்ணதேவராயர் கட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியில் கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பர்.

நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையின் மீது தேங்காய் உடைக்கப்பட்டது. இதில் சிலருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவர்களுக்கு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

புதுக்கோட்டை வீரலட்சுமி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைக்கும் பக்தர்கள்.
புதுக்கோட்டை வீரலட்சுமி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைக்கும் பக்தர்கள். - படம்: தமிழக ஊடகம்

அதேபோல் புதுக்கோட்டை, செல்லுகுடி வீரலட்சுமி அம்மன் கோவில் திருவிழாவிலும் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் அடித்தும் நேத்திக்கடனை நிறைவேற்றினர். செல்லுகுடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வீரலட்சுமி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.

சனிக்கிழமை அதிகாலை வீரலட்சுமி அம்மன், செல்லாயி, பேராயி ஆகிய தெய்வங்கள் நான்கு வீதிகளிலும் வீதியுலா வந்தனர். அப்போது, பெண்கள் முளைப்பாரி எடுத்தனர்.

தொடர்ந்து, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் முன்பு நேத்திக்கடன் செலுத்தும் பக்தர்களை வரிசையாக அமர வைத்து, கோயில் பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காயை உடைத்தார். 

அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் பூசாரியிடம் சாட்டை அடியும் பெற்றுக் கொண்டனர். பல ஆண்டுகளாக இந்த வழிபாடு நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்