தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்குக் கொலை மிரட்டல்

2 mins read
f82c2f35-458a-421b-9e64-ba2fa80b14e4
கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங், மனைவி, மகளுடன். - படம்: ஊடகம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரது குடும்பத்திற்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், ஆம்ஸ்ட்ராங் மனைவி, உறவினர்கள் வசிக்கும் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்புக்கு காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சென்னை பெரம்பூரில் உள்ள வேணுகோபால் சுவாமி தெருவில் புதிய வீட்டைக் கட்டி வந்த ஆம்ஸ்ட்ராங், அதே இடத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை ஜூலை 5ஆம் தேதி நடந்தது.

சம்பவம் தொடர்பாக திமுக, பாஜக, அதிமுக கட்சியினர், 5 வழக்கறிஞர்கள் உட்பட இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான திருவேங்கடம் என்பவர் காவல்துறை என்கவுண்ட்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்களின் சொத்துகளை முடக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

விசாரணை நடைபெற்று வரும் வேளையில், அவர் குடும்பத்துக்கு சதீஷ் என்பவர் பெயரில் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையைக் கடத்தி விடுவதுடன் அவருடைய குடும்பத்தைக் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆம்ஸ்ட்ராங் மனைவி புகார் அளித்தார்.

வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இத்தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்போ செந்தில் தாய்லாந்துக்குச் தப்பிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங்கைக் கொலை செய்வது தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகியும் கஞ்சா வியாபாரியுமான அஞ்சலை, 4 இடங்களில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் சதி ஆலோசனை நடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளாராம். புழல், அரக்கோணம், திருநின்றவூர், ஆந்திர மாநிலம் சித்தூரில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் அஞ்சலை சதி ஆலோசனை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்