பொறியியல் கல்லூரிகளில்676 பேராசிரியர்கள் மோசடி

பொறியியல் கல்லூரிகளில்676 பேராசிரியர்கள் மோசடி

2 mins read
13690af7-c1d8-41d5-9bfc-be6db6675eaf
பேராசிரியர் மோசடி விவகாரத்தை அண்ணா பல்கலைக் கழகம் விசாரித்து வருகிறது. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: பேராசிரியர்கள் மோசடி விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் முதற்கட்ட விசாரணையை முடித்துள்ளது.

இதில் 676 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் 2023-2024ஆம் கல்வியாண்டில் முழுநேர பேராசிரியர்களாக பணியாற்றியிருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் தொடர்ந்து இத்தகைய மோசடியில் ஈடுபட்டிருப்பதும், இவர்கள் ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழு நேரப் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.

குறைந்தது கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் இந்த மோசடி நடந்துள்ளது. இவர்களை தற்போதைக்கு பட்டியலிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் பேராசிரியா் நியமன மோசடி குறித்து தொடர்புடைய கல்லூரிகளுக்கு விளக்கக் கடிதம் அனுப்பி விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 470க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் ஆதாா் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி பேராசிரியா்கள் சிலா் முறைகேடாக ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணியாற்றிய தகவல்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டு சா்ச்சையாகியுள்ளது.

இந்த முறைகேட்டில் 800 போ் வரை ஈடுபட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது தொடா்பாக மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பேராசிரியா்களை நேரில் அழைத்து விசாரிக்கவும் குழுவினா் திட்டமிட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் 211 பேராசிரியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த எண்ணிக்கை தற்போது 676 ஆக அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர். வேல்ராஜ், ஒரே ஒரு பேராசிரியர், 22 கல்லூரிகளில் முழு நேர பேராசிரியராகப் பணியாற்றுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு எந்தக் கருணையும் வழங்கப்படாது. இவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் எந்தப் பொறியியல் கல்லூரியிலும் பணியாற்ற முடியாத வகையில் தடை செய்யப்படும் என்றார்.

குறிப்புச் சொற்கள்