சென்னை: தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இம்மாதம் அமெரிக்கா செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
மத்திய வெளியுறவு அமைச்சு அவர் அமெரிக்கா செல்வதற்கு முறைப்படி அனுமதியும் வழங்கி விட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 15 நாட்கள் அமெரிக்கா சென்று வரும் வகையில் முதலமைச்சரின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் கூகல் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ளார். அத்துடன் அமெரிக்கா வாழ் தமிழர்களை சந்திப்பதுடன் அவர்களையும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.
அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகளும் உடன் செல்ல உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இம்மாதம் 22ஆம் தேதி அமெரிக்கா செல்வார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் 27ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) அமெரிக்கா புறப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.