சென்னை: சென்னை மாநகராட்சியின் பாலினம், கொள்கை ஆய்வகம் சார்பில் “தப்புன்னு தெரிஞ்சா பட்டுன்னு கேளு” என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை திருவிக பூங்காவில் மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் மாநகராட்சியின் 1913 என்ற எண்ணில் உதவி கோரலாம். இந்த எண் அனைத்து பகுதியிலும் அறிவிப்புப் பலகைகளில் பொறிக்கப்படும் என்றும் மேயர் பிரியா கூறினார்.
தலைநகர் சென்னையை பெண்களுக்கான 100 விழுக்காடு பாதுகாப்பான நகரமாக மாற்றுவதே எங்களது நோக்கம் என்று அவர் மேலும் கூறினார்.
3,000 பேரிடம் நடத்தப்பட்ட கருத்தாய்வில், பொது இடங்களில் பெண்கள் சீண்டலுக்கு ஆளாகும் போது யாரும் தலையிட்டு தட்டிக் கேட்க முன்வருவதில்லை என்று 62% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொது இடங்களில் பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளானால் பொதுமக்கள் உடனே தட்டிக் கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.