தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எடப்பாடி காவல்நிலையத்தில் குண்டு வெடிப்பு

2 mins read
50adc7de-faa7-4825-9832-a095646ac443
சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி காவல் நிலையம். - கோப்புப்படம்: ஊடகம்

எடப்பாடி: சேலம் மாவட்டத்தின் எடப்பாடி ஜலகண்டபுரம் சாலையில் உள்ள  காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 பெட்ரோல் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு காவல்நிலைய வளாகத்திற்குள் விழுந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் அந்தத் தீயை நீரூற்றி அணைத்தனர். தீப்பற்றி எரிந்தது பெட்ரோல் குண்டுகள் என்பதை உறுதிப்படுத்திய காவலர்கள், காவல் நிலையத்தைச் சுற்றிலும் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அந்தக் குண்டுகளை வீசியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கருவிகளின் பதிவுகளை ஆய்வு செய்த காவல்துறையினர், காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசியவர்களை குழு அமைத்து தேடி வருகின்றனர்.

அண்மையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிலர் மீது எடப்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாரேனும் இதுபோன்ற குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், சங்ககிரி டி.எஸ்.பி ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் எடப்பாடி காவல் நிலையத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதைவிட மோசமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட முடியாது என்று ஒவ்வொரு முறையும் நினைப்பதற்குள் அதனினும் மோசமான நிகழ்வு இந்த திமுக ஆட்சியில் ஏற்படுகிறது. காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டத்தின் மீதும், காவல் துறையின் மீதும் குற்றவாளிகளுக்குத் துளியும் அச்சமில்லை என்கிற அளவுக்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனியவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்