தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் - வைகோ

3 mins read
619e47ad-038f-4995-bc9a-1f3986f29357
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தலைமையில் தமிழக மீனவர்கள், பாதுகாப்புக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் மனு அளித்தனர். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கையர்களால் கொல்லப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய வைகோ, தமிழக மீனவர்களின் படகுகளை உடைப்பதையும், வலைகளை அறுப்பதையும், துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்வதையும் தங்கள் பொழுதுபோக்காக இலங்கைக் கடற்படை செய்து வருகிறது. கடந்த 45 ஆண்டுகளில் தமிழக மீனவர்களில் 850க்கும் மேற்பட்டவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்தது. இப்போது 85 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டனர்.

இலங்கையின் இந்தப் போக்குக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை. தற்போது 85 தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இரண்டு நாள்களுக்கு முன்னர், நான்கு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மீனவர் கொல்லப்பட்டிருக்கிறார். இரண்டு முறை பிரதமர் நரேந்திர மோடியையும் ஒருமுறை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து இதுகுறித்துத் தெரிவித்துள்ளேன் என்று திரு வைகோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் 22 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இலங்கையால் கடந்த சில வாரங்களில் மட்டும் 80க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்பாகவும் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பது தொடர்பாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

அண்ணாமலை தலைமையில் மீனவர்கள் மனு

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர் பிரதிநிதிகள் திங்கட்கிழமை டெல்லி சென்றனர். அங்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பான மனுவை வழங்கினர். அப்போது, ஆழ்கடல் பகுதியில் இலங்கைக் கடற்படைப் படகு மோதி உயிரிழந்த மீனவர் மற்றும் காணாமல் போன மற்றொரு மீனவர் குறித்தும், ராமநாதபுரத்தில் மீனவர்கள் போராட்டம் குறித்தும் பேசப்பட்டது. காணாமல் போன மீனவரை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தமிழ் நாட்டு மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அப்போது மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ராமேசுவரத்தில் அதிமுக போராட்டம்

இலங்கை கடற்படையின் சுற்றுக்காவல் கப்பல் மோதி ராமேசுவரத்தைச் சார்ந்த விசைப்படகு மூழ்கி அதிலிருந்த மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்தார். ராமச்சந்திரன் என்ற மீனவர் கடலில் காணாமல் போனார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை (ஆக.6) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். மீனவப் பிரதிநிதிகள் சகாயம், எம்ரிட், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார், மீனவப் பிரதிநிதிகள் எல்லாம் இங்கே ராமேசுவரத்தில் இருக்கும்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக மீனவப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்ததாக நாடகம் ஆடுகிறார் என்றார்.

குறிப்புச் சொற்கள்