திருச்சி: தமிழகப் பெண் காவலர்கள், அதிகாரிகள் மீது குறைகூறி சவுக்கு சங்கர் அளித்த சர்ச்சைக்குரிய பேட்டியை யூடியூப் சேனலில் ஒளிபரப்பிய ‘ரெட்பிக்ஸ்’ சேனலின் தலைமை நிர்வாகியும் நெறியாளருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி மத்திய சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது கோயம்புத்தூர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் இவருக்கு கடந்த மே 22ஆம் தேதி பிணை வழங்கப்பட்டது. அதேசமயம் கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் இவரது பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், அவர் தனது பேச்சுக்கான விளைவு தற்போது தான் உணர்ந்துள்ளதாகவும் இனி ஒரு போதும் இவ்வாறு பேச மாட்டேன் எனவும் உறுதி அளித்தார்.
ஜெரால்டு தரப்பினரின் வாதத்தைக் கேட்ட நீதிமன்றம் அவரது யூடியூப் சேனலை மூட வேண்டும், வெளியே இனி பேட்டி தரக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்குப் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன் கோயம்புத்தூர் டவுன்ஹால் காவல் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை தோறும் சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையையும் நீதிமன்றம் விதித்தது.
அதையடுத்து ஜெரால்டு, செவ்வாய்க்கிழமை காலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில் சவுக்கு சங்கர் மே 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

