தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு

2 mins read
cd03d36f-d3b2-40af-a779-edc31be37f18
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் இருவரும் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். - படம்: ஊடகம்

சென்னை: வருமானத்திற்கும் அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான வழக்குகளிலிருந்து சிறப்பு நீதிமன்றம் அவர்களை விடுவித்திருந்தது.

இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை துவங்கியது. வழக்குகளில் அமைச்சர்கள் தரப்பிலும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அனைத்துத் தரப்பு விசாரணையும் முடிவடைந்ததையடுத்து, இந்த மூன்று வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்நிலையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் இருவருக்கும் எதிரான வழக்குகளில் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) தீர்ப்பளிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர்கள் இருவரையும் விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விசாரணை அதிகாரி, சாட்சியங்களை வேறு வகையில் பதிவுசெய்ததாகவும் முக்கியத் தவறு நடந்திருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். எனவே, விருதுநகர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை முதலில் இருந்தே விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டுமென நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதற்கான விசாரணையை நாள்தோறும் நடத்த வேண்டும் என்றும் விசாரணைக்காக அமைச்சர்கள் இருவரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நேரில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்