சென்னை: பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைபோல தமிழகத்தில் கொலை செய்யும் கொடூரச் செயல்களில் ஈடுபடும் கூலிப்படையினர் அதிகரித்துள்ளதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த திங்கட்கிழமை நெல்லை மேலப்பாளையத்தில் இணையச் சேவை நிலையம் நடந்திவரும் சையது தமீம் என்பவரை அவருடைய கடைக்குள் புகுந்த சிலர் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அந்தப் பகுதியில் கொலைச் சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதி மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக முபாரக் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் தருமபுரியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்த முகமது ஆசிப் என்பவர் கொல்லப்பட்டார். இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் சிறுபான்மை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் போதைக் கும்பலால் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மறுபுறம் கூலிப்படையினரால் கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல், ஆணவக் கொலைகளும் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதில் திமுக அரசும் காவல்துறையும் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகின்றன.
ஆகவே, அதிகரித்து வரும் குற்றச்செயல்களைத் தடுத்து நிறுத்தவும் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் மக்களின் அச்சத்தைப் போக்கவும் தமிழக அரசும் காவல்துறையும் சட்ட ஒழுங்கைக் காக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கொலைக்களமாக மாறிவரும் தமிழ்நாட்டைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என முபாரக் கேட்டுக்கொண்டுள்ளார்.