புதுடெல்லி: சாலை விபத்துகள், உயிரிழப்பு எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட சாலை விபத்து தொடர்பான கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த எழுத்துபூர்வ பதிலில் சாலை விபத்து குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் “இந்தியாவில் சாலை விபத்துகள்” என்ற அறிக்கையை அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதன்படி, 2022ல் இந்தியா முழுவதும் 461,312 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. அதில் 168,491 பேர் உயிரிழந்தனர்.
இதில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 64,105. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,884. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 67,703 என்று அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. சாலைப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முகமைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்/வாரம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓட்டுநர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன.
சாலைகள் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு ஆகியவை குறித்து மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்கள், நிபுணர்கள் மூலம் சாலைப் பாதுகாப்பு தணிக்கை, அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் மோட்டார் வாகனங்களால் விபத்தை ஏற்படுத்தி, தப்பிச்சென்றுவிடும் நேர்வுகளில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.25,000லிருந்து ரூ.2 லட்சமாகவும் படுகாயமடைந்தோருக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.12,500லிருந்து ரூ.50,000வும் உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.