தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவர்களின் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்: அன்புமணி வலியுறுத்து

2 mins read
3978639f-e756-41c3-983d-cd1cce05d5ba
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழகத்தில் பல ஆண்டுகளாகத் தொடரும் கஞ்சா வணிகத்தைத் தடுக்க அரசோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா புழக்கம் நாளும் அதிகரித்து வரும் சூழலில், இனியும் அலட்சியமாக செயல்படாமல் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

கஞ்சா போதைக்குப் பள்ளி மாணவர்கள் அடிமையாவதில் இருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் மாநில அரசுக்கு இருப்பதாகவும் கூறியுள்ள அன்புமணி, இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பில் பயின்ற மாணவர் ஒருவர் வகுப்பு நேரத்தில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அந்த மாணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீண்டகாலமாகவே அவர் அப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததும் அவரிடம் பல கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் தெரிய வந்தது.

இந்தியாவின் எதிர்காலத் தூண்களான மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி திசைமாறிப் போவதை நினைக்கவே அச்சமாகவும் கவலையாகவும் உள்ளது.

தனது பள்ளிக்கு மிக அருகில் உள்ள பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகில் கஞ்சா விற்கப் படுவதாகவும் அங்கிருந்துதான் கஞ்சா வாங்கியதாகவும் மாணவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மாணவருக்கு கஞ்சா விற்ற மூவர் கைதாகினர்.

இந்தப் பிரச்சினை பல ஆண்டுகளாகத் தொடரும் நிலையில், கஞ்சா வணிகத்தைத் தடுக்க அரசோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் அதிகரித்து வருவது குறித்தும், அதைத் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இரு முறை நேரில் சந்தித்து போதைப்பொருள்கள் நடமாட்டத்தைத் தடுக்கும்படி வலியுறுத்தினேன். ஆனால், ஒரு பலனும் இல்லை.

தமிழ்நாட்டில் கஞ்சா வணிகத்தை ஒடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி தமிழக அரசும், காவல்துறையும் அவ்வப்போது கஞ்சா 1.0, கஞ்சா 2.0, கஞ்சா 3.0, கஞ்சா 4.0 என்ற பெயரில் சோதனை நடத்துவதாகவும் ஒவ்வொரு முறையும் டன் கணக்கில் கஞ்சா பிடிபடுவதாகவும் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்படுவதாகவும் கூறி பெருமைப்பட்டுக் கொள்கின்றன.

ஆனால், அதனால் என்ன பயன்? பள்ளிக்கு அருகிலேயே மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

பழவந்தாங்கல் பள்ளிக்கு அருகில் மட்டும்தான் இந்த நிலைமை என்று சொல்லமுடியாது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகளிலும் இதே நிலைமைதான் உள்ளது.

அப்படியானால், ஒவ்வொரு முறையும் கஞ்சா வேட்டை பெயரளவுக்குத் தான் நடக்கிறது, காவல்துறை ஒத்துழைப்புடன் கஞ்சா வணிகம் நடப்பதாகவே எண்ணவேண்டியுள்ளது. இதை தமிழக அரசும் காவல்துறையும் வேடிக்கைப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது.

எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்