தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வயநாடு துயர்துடைப்பு: வினோத விருந்தில் பணத்தைக் கொட்டிய திண்டுக்கல் மக்கள்

2 mins read
b9e3e3f4-903d-431c-b0f7-4c1b569f4049
நிவாரண நிதிக்கான விருந்தில் பங்கேற்க இரவில் திரண்ட கூட்டம். - படம்: தமிழக ஊடகம்

திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான். இவர் இங்கு இரு இடங்களில், ‘முஜிப் பிரியாணி’ என்ற பெயரில் பிரியாணிக் கடை நடத்துகிறார்.

இவர், நிலச்சரிவுகளால் துயரத்தில் வாடும் வயநாடு மக்களுக்கு உதவும் நோக்கில் ஹோட்டல் அசோசியேஷன், ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ‘சுய விருந்து’ என்ற மொய் விருந்து நடத்தினார்.

இரவு 8 முதல் 11 மணி வரை விருந்து நடந்தது. இலவசமாகச் சாப்பிட்டுவிட்டு இயன்ற பணத்தை நிவாரணத்துக்கு அளிக்கலாம் என்ற தகவலை அறிந்து ஏராளமானோர் பிரியாணிக் கடை முன்னர் திரண்டனர்.

தோசை, இனிப்பு வகை, சிக்கன் 65, பரோட்டா, முட்டை, இட்லி, கோழி பிரியாணி, நெய் சோறு என 10 வகையான உணவுகள் அவர்களுக்குப் பரிமாறப்பட்டன.

முதற்கட்ட விருந்தில் 700 பேர் சாப்பிட்டனர். இரண்டாம் கட்ட விருந்தில் 300 பேர் சாப்பிட்டனர்.

சாப்பிட்டு முடித்த பின் இலைக்கு அடியில் தங்களால் முடிந்த உதவித்தொகையை வைத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி உணவை உண்டபின் நிவாரண உதவித் தொகையை இலைக்கு அடியில் 50 ரூபாய் முதல் 2,500 ஆயிரம் ரூபாய் வரை மொய் வைத்தனர்.

கடை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலிலும் சிலர் பணம் செலுத்தினர்.

சிறுவர்களும் வீட்டில் உண்டியலில் சிறுக சிறுகச் சேர்த்து வைத்த சில்லறைக் காசுகளை நிவாரண நிதிக்காக உண்டியலில் செலுத்தினர். வசூலான மொத்த பணம் 2 லட்சத்து 16 ஆயிரம்.

இந்த நிகழ்ச்சி பற்றி செய்தியாளர்களிடம் கூறிய முஜிபுர் ரகுமான், “மூன்று மணி நேரம் நடந்த விருந்தில் ஆயிரம் பேர் சாப்பிட்டனர். அவர்கள் அளித்த தொகை 2 லட்ச ரூபாயைத் தாண்டியுள்ளது.

“இதனை அறிந்து தொடர்ந்து பலரும் உதவித் தொகை கொடுக்கின்றனர். மொத்தத் தொகையை அடுத்த வாரம் கேரள அரசிடம் வழங்க உள்ளேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்