கோவை: அரசுப் பள்ளியில் படித்த கல்லூரி மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) தொடங்கி வைத்தார்.
தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் பயின்று உயா் கல்வியில் சேரும் 3.28 லட்சம் மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கென நடப்பாண்டில் ரூ.360 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் கல்லூரி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) இரவே ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் புதல்வன் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மு.க. ஸ்டாலின், “ஒரு தந்தையாக, குடும்பத்தில் ஒருவராக இருந்து தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன் .
“பள்ளிப் படிப்பை முடிக்கும் அனைத்து மாணவர்களும் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்.
“ஒருவர்கூட திசைமாறாமல் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு உடனடியாக கல்லூரியில் சேரவேண்டும்,
“தமிழக அரசின் திட்டங்களை தமிழக மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
“உங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை விட நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை கடந்த 2022 செப். 5-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
அதுபோல, இந்தக் கல்வியாண்டில் மாணவா்களுக்கும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
தமிழ்ப் புதல்வன் எனும் பெயரிலான திட்டமானது, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களின் உயா் கல்விச் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.