தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓய்வுபெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

2 mins read
0c03b6f9-a0f0-42b4-b51d-04d9e7afb8d0
சிலைக்கடத்தல் பிரிவின் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேலின் வீட்டில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) காலை முதல் சோதனை நடத்தினர்.

பொய் வழக்கு பதிவு செய்து சிலைக் கடத்தல் பிரிவு முன்னாள் டிஎஸ்பி காதர் பாட்சாவை கைது செய்தது தொடர்பாக, சிபிஐ 2023ஆம் ஆண்டில் பதிவு செய்த வழக்கில் பொன்மாணிக்கவேல் வீட்டில் இப்போது சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன்.மாணிக்கவேல் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் சுமார் 7.5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பொன்.மாணிக்கவேல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தன் மீது நடவடிக்கை எடுத்தார் என்று காதர் பாட்சா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் 3 உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த மூன்று சிலைகளையும் காவல் துறையில் பணியாற்றிய டிஎஸ்பி காதர்பாஷா, கோயம்பேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய சுப்புராஜ் என்பவரும் விவசாயியுடன் சேர்ந்து விற்றதாக 2018 ஆம் ஆண்டு பொன் மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்தார்.

மேலும் அந்த வழக்கில் டிஎஸ்பி காதர் பாட்சாவையும் எஸ்எஸ்ஐ சுப்புராஜையும் பொன் மாணிக்கவேல் கைது செய்தார்.

இந்த வழக்கை எதிர்த்து முன்னாள் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தன் மீதும் வேறு சில காவல்துறை அதிகாரிகள் மீது பொய் வழக்குப் போட்டுள்ளார். எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் தன் மனுவில் முன்னாள் டிஎஸ்பி பாட்சா தெரிவித்து இருந்தார்.

கடந்த 1989ஆம் ஆண்டு குரூப் 1 அதிகாரியாக தேர்ச்சி பெற்று தமிழக காவல்துறையில் நேரடியாக டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தவர் பொன் மாணிக்கவேல்.

பின்னர் 1996ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று சேலம் மாவட்ட எஸ்பி, உளவுப்பிரிவு டிஜஜி, சென்னை மத்திய குற்ற பிரிவு இணை ஆணையர், ரயில்வே மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி என பல பதவிகளில் இருந்துள்ளார். 2018ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி அவர் பணி ஓய்வு பெற்றார்.

குறிப்புச் சொற்கள்