தஞ்சாவூர்: தஞ்சையில் 12 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுத்த பெருமாள் சிலையை வெளிநாட்டிற்கு விற்க முயன்ற எழுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜெகநாதன் நகரத்தை சேர்ந்த ஜனகராஜ் மகன் ராஜேந்திரன் (52), கும்பகோணம் வட்டம் அலமங்குறிச்சி உடையார் தெருவை சேர்ந்த சேகர் மகன் ராஜ்குமார் (36), திருவாரூர் மாவட்டம் இனாம் கிளியூர் தெற்குத் தெருவை சேர்ந்த ஆனந்தகுமார் மகன் தினேஷ் (28), அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் ஜெய்சங்கர் (58), கடலூரை சேர்ந்த கலியமூர்த்தி மகன் விஜய் (28), திருவிடைமருதூரை சேர்ந்த ஹாரிஸ் (26), காட்டுமன்னார்குடியை சேர்ந்த அஜித்குமார் (26) ஆகிய ஏழு பேரிடமும் சிலை தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
திருவாரூரைச் சேர்ந்த தினேஷின் தந்தை 12 ஆண்டுகளுக்கு முன் தொழுவூர் ஆற்றில் துார்வாரும் பணியில் ஈடுபட்ட போது சிலை கிடைத்துள்ளது. இது குறித்து வருவாய் துறையினரிடம் தகவல் அளிக்காமல் அதை தனது மாட்டு கொட்டகையில் மறைத்து வைத்துள்ளார்.
அவரது மறைவுக்குப் பிறகு மாட்டுகொட்டகையில் மறைத்து வைத்திருந்த சிலையை தினேஷ் கண்டெடுத்துள்ளார். அவரும், வருவாய்துறையினரிடம் தெரிவிக்காமல் சிலையை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார். நண்பர்கள் மூலம் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் உதவியை நாடியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எழுவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 2.5 அடி உயரமுள்ள ஐம்பொன் பெருமாள் சிலை, 15 முதல் 16ஆம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர்கள் காலத்து சிலையாக இருக்கலாம் எனவும், தமிழ்நாட்டின் அறியப்படாத கோயிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான பழங்கால பெருமாள் சிலையை பறிமுதல் செய்த தமிழ்நாடு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு, காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.