சென்னை: கோலாலம்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2,600 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோலாலம்பூரிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட அந்த ஆமைகள் சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகளாகும்.
இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த பயணியைக் கைதுசெய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நட்சத்திர ஆமைகளை மீண்டும் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பவும் சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான செலவுகள் அனைத்தையும் கடத்தி வந்த பயணியிடமே வசூலிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வகை சிவப்புக் காது அலங்கார நட்சத்திர ஆமைகள், தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட இடங்களில் அதிகமாக காணப்படுகின்றன.
இவற்றைப் பெரிய பங்களாக்களில், அலங்காரத் தொட்டிகளில் வைத்து வளர்த்து வருகின்றனர். இவை மருத்துவ குணம் உடையவை என்பதால் மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை ஆமைகளால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதோடு, வெளிநாட்டு நோய்க்கிருமிகளும் இந்தியாவுக்குள் பரவிவிடும் என்பதால், அவற்றை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது என்று சுங்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.