செந்தில் பாலாஜி பிணை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

1 mins read
7b5835ba-44fd-4daa-99a6-96f2856acd2d
செந்தில் பாலாஜி ஓராண்டாக சிறையில் இருந்து வருகிறார். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

புதுடெல்லி: தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பிணை கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அவர் ஓராண்டாக சிறையில் இருந்து வருகிறார்.

இதுவரை அவருக்கு பிணை கிடைக்கவில்லை. அவரது பிணை மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) விசாரணையின்போது, “செந்தில் பாலாஜி விவகாரத்தில் விசாரணை எப்போது நிறைவடையும்?” என நீதிபதிகள் அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு, “வழக்கு விசாரணை தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம். செந்தில் பாலாஜியுடன் தமிழக அரசு நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளுக்கு ஆபத்து,” என்று அமலாக்கத்துறை கூறியது.

செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், “15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வழக்கின் தீர்ப்பு பொருந்தும். செந்தில் பாலாஜி, ஒரு முன்னாள் அமைச்சர், ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்தவர். எங்கும் தப்பிச் செல்ல மாட்டார். எனவே, பிணை வழங்க வேண்டும்,” என்று வாதிட்டார்.

இரு தரப்பினரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி பிணை கோரிய வழக்கை தீர்ப்புத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

குறிப்புச் சொற்கள்