பல கோடி ரூபாய் மோசடி: பதுங்கி இருந்த பாஜக வேட்பாளர் கைது

1 mins read
09a74c30-2e73-4f96-a4ef-d0cf49b887c0
இந்திய மக்கள் கல்வி இயக்கத் தலைவர் தேவநாதன் யாதவ். - படம்: தமிழக ஊடகம்

திருச்சி: நிதி நிறுவனத்தில் ரூ. 525 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய மக்கள் கல்வி இயக்கத் தலைவர் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி’ நிறுவனத்தின் தலைவராக தேவநாதன் இருந்து வருகிறார்.

அந்த நிதி நிறுவனம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் 140க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.

தொடர்ந்து, தேவநாதன் யாதவ் மீதும் ஏராளமான புகார்கள் வந்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தேவநாதனைக் கைது செய்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்ட நிலையில், அவர் தலைமறைவானார். அவரது கைப்பேசி சமிக்ஞை மூலம் திருச்சி அருகே அவர் இருப்பது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திருச்சி விரைந்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், அங்கு பதுங்கி இருந்த தேவநாதனை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) கைது செய்தனர்.

சென்னைக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அவரை அடைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளராக தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் தேவநாதன் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் போட்டியிட தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.305 கோடி எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்