தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.525 கோடி மோசடி: நிதிநிறுவன அதிபரிடம் 10 மணிநேரம் விசாரணை

2 mins read
10b8ec7e-cd8b-477e-86fc-a23ad5bb74fc
நிதி மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் கூறப்படும் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் லிமிட்டெட்’ நிதி நிறுவனத்தின் தலைவர் தேவநாதன் யாதவிடம் காவல்துறை 10 மணிநேரம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் லிமிட்டெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 150 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. முதலீட்டுக்கு கவர்ச்சியான வட்டி கிடைக்கும் என்று அந்நிறுவனம் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் 5,000க்கு மேற்பட்ட மாநில, மத்திய அரசு ஊழியர்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

இந்நிலையில், இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பணத்தைத் திரும்பக் கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர். அந்நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு வட்டிப் பணமோ, முதிர்வுத் தொகையோ எதுவும் கிடைக்கவில்லை. மொத்தம் ரூ.525 கோடி அந்நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்நிறுவனத்திற்குப் பணம் கேட்டு நடையாய் நடந்த கிட்டத்தட்ட 150 முதலீட்டாளர்களுக்கு காசோலையை வழங்கியது அந்த நிறுவனம். ஆனால் அந்தக் காசோலையோ பணம் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள தமிழகக் காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக அந்த நிதி நிறுவனத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் என்பவரை புதுக்கோட்டையில் உள்ள கட்டியா வயல் என்ற பகுதியில் காவல்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத்தின் தலைவராக உள்ள இவர், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவிடம் செவ்வாய்க்கிழமை 10 மணிநேரத்துக்கும் மேலாக பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களும் திரண்டு வந்து தங்களின் பணத்தைக் கேட்டு வந்ததால் நிதி நெருக்கடி ஏற்பட்டதாக அந்த நிதி நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்