தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: மத்திய அரசை வலியுறுத்த முடிவு

1 mins read
b5a45252-3027-42fb-a33c-f4499b42572e
புதுச்சேரி சட்டமன்றக் கூட்டம். - படம்: தமிழக ஊடகம்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தும் தனிநபர் தீர்மானங்கள் அரசு தீர்மானமாக புதன்கிழமை (ஆகஸ்ட் 14) சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தப்போவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் வைக்கப்போவதாகவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

“புதுச்சேரி யூனியன் பிரதேசம் மத்திய அரசின் உள்துறையால் ஆளும் பகுதியாக தொடர்கிறது. கோவா, சண்டிகர் தனி மாநிலங்களாகிவிட்டன. புதுச்சேரிக்கும் தனி மாநில அந்தஸ்து கோரி பலமுறை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அந்தவிதத்தில், மாநில அந்தஸ்து கோரிக்கை 1970ல் தொடங்கி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

“ஆனால் மத்திய அரசு தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என தெரிவித்துள்ளது. எனவே, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை இச்சட்டப்பேரவை வலியுறுத்துகிறது,” என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக பேரவைத்தலைவர் செல்வம் தெரிவித்தார். இந்தத் தீர்மானம் பேரவையில் 15வது முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்