ரயில் பயணிகளிடம் மயக்க மருந்து கலந்த தேநீர் கொடுத்து நகை திருட்டு

ரயில் பயணிகளிடம் மயக்க மருந்து கலந்த தேநீர் கொடுத்து நகை திருட்டு

2 mins read
72934059-bc67-42cf-99da-433beeab5897
ரயில் பயணத்தின்போது முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் கொடுத்த தேநீரை அருந்திவிட்டு மயக்கநிலையில் நகைகளைப் பறிகொடுத்த இரண்டு பெண்களில் ஒருவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். - கோப்புப் படம்

கடலூர்: மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயிலில் பயணம் செய்த இரண்டு பெண்களிடம் மயக்க மருந்து கலந்த தேநீரைக் கொடுத்து அவர்களிடம் இருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பேற்படுத்தியுள்ளது.

அந்த இரண்டு பெண்களும் பயணம் செய்த அதே ரயில் பெட்டியில் மூன்று பேர் ஏறி அமர்ந்தனர். அவர்கள் மூவரும் இவர்களிடம் நயமாகப் பேசி நட்புடன் பழகினர்.

பின்னர், அந்த மூவரில் ஒருவர் தான் கொண்டுவந்த தேநீரை அந்த இரண்டு பெண்களுக்கும் ஆளுக்கொரு கப்பில் ஊற்றிக் கொடுத்தார். அந்த ஆடவர் அன்பாகக் கொடுக்கும் தேநீரை மறுக்காமல் இரண்டு பெண்களும் வாங்கிக் குடித்தனர்.

இந்நிலையில், சோலாப்பூர் ரயில் நிலையத்தை ரயில் அடைந்தபோது அந்த இரண்டு பெண்களும் மயக்கநிலை அடைந்தனர். அதையறிந்த அந்த மூன்று பேரும் அவர்கள் அணிந்திருந்த நகைகளையும், வைத்திருந்த பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

மயக்கநிலையில் இருந்து கண்விழித்துப் பார்த்த பெண்கள், தாங்கள் அணிந்திருந்த நகைகளையும், வைத்திருந்த பணத்தையும் காணாமல் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சக பயணிகளின் உதவியுடன் சம்பவம் குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், ரயில்வே காவல்துறை அதிகாரிகள் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்து தெளிவற்ற நிலையில் இருந்த அந்தப் பெண்களை மீட்டு அரக்கோணம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அறிமுகமற்ற அந்த மூன்று பேரும் தாங்கள் கொண்டுவந்த பிளாஸ்க்கில் இருந்த தேநீரைக் கொடுத்து பெண்கள் இருவரையும் மயக்கமடையச் செய்து அவர்களிடமிருந்து சுமார் ஐந்து பவுன் நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

ரயில்வே காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்