செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை கடற்கரைப் பகுதியில் அனைத்துலகக் காற்றாடித் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர்கள் ராமச்சந்திரன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் 150 காற்றாடிகளைப் பறக்கவிட்ட நிலையில் இந்த ஆண்டு 300 காற்றாடிகளைப் பறக்கவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் இந்த அனைத்துலக காற்றாடித் திருவிழா புதன்கிழமை முதல் நான்கு நாள்களுக்கு தொடர்ந்து மாமல்லபுரத்தில் நடக்கிறது.
இதில் மலேசியா, ஜெர்மனி, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இருந்தும் காற்றாடி பறக்கவிடுவதில் கைதேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் என 200க்கும் மேற்பட்டோர் 10 அணிகளாகப் பிரிந்து காற்றாடிகளைப் பறக்க விடுகின்றனர்.

