சென்னை: 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு இடங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அரசுப் பள்ளிகளில் படித்து பொறியியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களின் கல்வி செலவினங்களான, படிப்புக் கட்டணம், விடுதிக் கட்டணம் அல்லது போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் தமிழக அரசே வழங்கும் என உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு இடங்களில் சேரும் மாணவர்களிடம் எவ்விதமான கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என்று அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
“மேலும், அரசு உதவி பெறும் தொழிற்கல்லூரிகள், தனியார் சுயநிதி தொழிற்கல்லூரிகளில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் சேர்க்கை பெறும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், பொறியியல் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது,” என்றும் பொறியியல் கல்லூரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.


