தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகளிர் உரிமைத் தொகை: வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி

2 mins read
6a36f3c1-4d13-4579-a55a-95227ae3f2fc
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தின்முன் திரண்ட மக்கள். - படம்: இந்து தமிழ்
multi-img1 of 2

விழுப்புரம்: மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்படவிருப்பதாக சமூக ஊடகங்களில் பொய்த்தகவல் பரவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பொய்த்தகவலை நம்பி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் குவிந்த நிலையில், அந்தத் தகவல் வதந்தி என்று விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் அளிக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தில் விடுபட்டுப்போனவர்கள் இணைந்து கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. அதையடுத்து, இதுவரை இந்தத் திட்டத்துக்காக 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக வாட்ஸ்அப்பில் தகவல் பரவியதாகக் கூறப்பட்டது.

அதனால், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்முன் குவிந்தனர்.

அங்கு விசாரித்ததில் அத்தகைய முகாம் எதுவும் நடைபெறவில்லை என்று அறிந்த அந்தப் பெண்கள் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் சேர சிறப்பு முகாம் நடைபெறுவதாக வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி முற்றிலும் வதந்தியே என விழுப்புரம் ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மூலம் தமிழகத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் சிலரது விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களை கூறி நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் நிராகரிக்கப்பட்டவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவியதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பெண்கள் குவிந்தனர். குறிப்பாக, நெல்லை, விழுப்புரம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஏராளமான பெண்கள் குவிந்ததாகக் கூறப்பட்டது. அவர்களிடம் வாட்ஸ்அப்பில் வரும் தவறான தகவலை நம்பி யாரும் வர வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த பெண்கள், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஊடகங்கள் கூறின.

தமிழ்நாட்டு அரசின் திட்டங்கள் தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்