தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விநாயகர் சதுர்த்திக்காக விதவிதமான விநாயகர் சிலைகள்

2 mins read
9ed61717-9c5a-4889-936b-00d51b1c3c21
படம்: - தினத்தந்தி

கன்னியாகுமரி: விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா, இவ்வாண்டு செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படும்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இவ்விழாவின்போது பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து, காலை, மாலை இருவேளைகளிலும் பூஜைகள், பஜனைகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கிட்டத்தட்ட 5,000 இடங்களில் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பின்னர் இச்சிலைகள் செப்டம்பர் 13, 14 , 15 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்கப்படும்.

எனவே விநாயகர் சிலை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இரணியல் அருகே கண்ணாட்டுவிளை, இரணியல் கோணம் பகுதியில், ஒரு அடி முதல் 11 அடி வரையிலான உயரத்தில் விநாயகர் சிலைகள் தயாராகின்றன.

சிம்ம விநாயகர், மயில் விநாயகர், சூரசம்ஹார விநாயகர், வெற்றி விநாயகர், கறுப்பு விநாயகர், வலம்புரி விநாயகர் எனப் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.

ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த சில நாள்களாக இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

சூரங்குடி பகுதியில், எளிதில் கரையக்கூடிய வகையில் களிமண், சாக்பீஸ் (கரும்பலகை எழுதுகோல்) தூள் போன்ற கலவைகளைக் கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

கோவை உக்கடம், செல்வபுரம் பகுதியில் ஐந்து அங்குல உயரமுள்ள சிறிய விநாயகர் சிலை முதல் 10 அடி உயரம் உள்ள பெரிய விநாயகர் சிலைகள் வரை தயாராகி வருகின்றன.

தண்ணீரில் எளிதில் கரையும் வகையில் ரசாயனம் இல்லாமல் களிமண், காகிதக் கூழ் போன்றவற்றைப் பயன்படுத்தித் தயாராகும் இச்சிலைகள் திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி போன்ற இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில், லட்சுமி நாராயண விநாயகர், லிங்க விநாயகர், ராஜ அலங்கார விநாயகர், ஐந்து தலை நாகத்தின் மீது சயன விநாயகர், மேலும் மான், அன்னம், மயில், சிங்கம் போன்ற வாகனங்களுடனான விநாயகர், மும்முகம், சித்தி புத்தி, ராஜகணபதி உட்படப் பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.

சிலையின் உயரம், வடிவமைப்புக்கு ஏற்ப அவற்றின் விலை இருக்கும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

குறிப்புச் சொற்கள்