தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய கட்டுப்பாடு: பத்து அடிக்கு மேல்விநாயகர் சிலைக்கு அனுமதியில்லை

2 mins read
c7792a39-7b5c-438f-bb6c-b72df4e8ba36
ஒலிபெருக்கி வைக்க காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழகம் முழுதும் சிலைகள் வைப்பதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் பத்து அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்க அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரசாயனக் கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். தனிநபர்களுக்குச் சொந்தமான இடங்களில் நிறுவப்படும் சிலைகளுக்கு, அதன் உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். பொது இடங்களில், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறுவது அவசியம். ஒலிபெருக்கிகள் வைப்பதற்கு காவல்துறை ஆய்வாளரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். எங்கிருந்து மின்சாரம் பெறப்படுகிறது என்ற விவரத்தையும் கடிதம் வாயிலாகத் தெரியப்படுத்த வேண்டும்.

விநாயகர் சிலைகள் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் வைக்கக்கூடாது. இதர மதங்களைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் முழக்கங்களை எழுப்பக்கூடாது. விநாயகர் சிலைகள் நிறுவப்படும் இடங்கள், ஊர்வலம் செல்லும் பாதையில் பட்டாசு வெடிக்கக்கூடாது. விநாயகர் சிலைகளை மினி லாரி, டிராக்டர் வாயிலாக மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் எடுத்து செல்லக்கூடாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில் காவல்துறைக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி சமூக விரோதிகள் சிலைகளைச் சேதப்படுத்துவதை காவல்துறைத் தடுக்க வேண்டும். பதற்றமான இடங்களில் சிலைகள் வைத்தால், சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் அதனை அனுமதிக்கக் கூடாது.

மசூதிகளில் தொழுகை நேரங்களில், விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அனுமதிக்கக் கூடாது. அவற்றைப் பதற்றமான பகுதிகள் வழியாகவும் அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்