திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தாய்மாமன், அத்தை மகன்கள் போட்டிபோட்டு சீர்வரிசை எடுத்த காதுகுத்து விழா சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த சபரிபாண்டி-சர்மிளா தம்பதியின்மகன் சித்தேஷின் காதுகுத்து விழா தனியார் திருமண மண்டபத்தில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
பழைய கால முறைப்படி டிராக்டர் வண்டியில் அரிசி மூட்டைகள், பழ வகைகள், வாழைத்தார்கள், சாக்லேட் வகைகள், புதிய ஆடைகள், விளையாட்டுப் பொருள்கள், ஆட்டுக் கிடாய், என 1,008 சீர்வரிசைகளுடன் பண மாலை, டிரம்ஸ், சரவெடிகள், குதிரைகள் பூட்டிய வண்டி, வாணவேடிக்கைகளுடன் திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
அத்தை மகன்களும் தப்பாட்டம், ஆட்டுக்கிடா, சீர்வரிசைகள், வாணவேடிக்கைகள் என மற்றொருபுறம் சீர் கொண்டு வந்தனர்.
இதனால் தாடிக்கொம்பு கிராமமே சீர்வரிசை வண்டிகளின் அணிவகுப்பாக காட்சியளித்தது.
சித்தேஷுக்கு பணமாலை மற்றும் சாக்லேட் மாலை, ரோஸ் மாலை, ரோஸ் இதழ் மாலை, தாழம்பூ மாலை, தாமரைப்பூ மாலை உள்ளிட்ட பல்வேறு மாலைகள் சூடி மகிழ்ந்தனர்.
தற்போது வீட்டு விசேடங்கள் என்பது குறிப்பிட்டவர்களை மட்டும் அழைத்துச் செய்யும் சடங்கு சம்பிரதாயமாக மாறிவிட்டது. ஆனால் பாரம்பரியத்தை மறக்காமல் ஒருசிலர் மட்டுமே அதனை கடைப்பிடித்து வருகின்றனர்.
குறிப்பாக தென்மாவட்டங்களில் இதற்கு இன்றும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் உறவுகள் கூடுவதோடு, நமது பழங்கால பழக்க வழக்கங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படுகிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

