பெண் குழந்தை ஆதரவுத் திட்டம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

2 mins read
6c1ad4c6-da53-4574-bb78-058be86ba383
காணாமல் போன சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கியதற்காக நீதிமன்றம் நன்றி தெரிவித்தது. - கோப்பு படம்: இணையம்

மதுரை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

“பிளஸ்-2 படித்த சிறுமியான எனது மகளை கடந்த மாதம் முதல் காணவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவிட வேண்டும்,” என அவர் கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிவகங்கை மாவட்ட காவல்துறையினர், காணாமல்போன மாணவியைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

அப்போது, தன்னை யாரும் கடத்தவில்லை, நண்பர்களுடன் தங்கியிருந்தேன், எனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என அந்த மாணவி தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தனர்.

சம்பந்தப்பட்ட மாணவி, மதுரையில் தங்கி பாதுகாப்புடன் கல்வி பயில்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் செய்ய வேண்டும் என்பது அந்த உத்தரவு.

“இந்த வழக்கில் மாணவிக்கு உடனடியாக பாதுகாப்பான இடமும் கல்வியும் வழங்க நடவடிக்கை மேற்கொண்ட அரசு வழக்கறிஞரின் செயல் சிறப்பானது.

“ஆதரவற்ற, பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள், மாணவிகள் பயனடையும் வகையில் குழந்தைகள் நலன், சிறப்பு சேவைத் துறையானது அவர்களுக்கு உணவு, உடை, சீருடை, கல்வி என அனைத்தும் வழங்கி வருகிறது. தமிழக அரசின் இந்தத் திட்டம் பாராட்டுக்குரியது,” என்று நீதிபதிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்