கருணாநிதிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்

1 mins read
be6460fe-8e0c-4d20-9e3b-e90127745151
கருணாநிதியின் நினைவிடத்தில் கும்பிடு போட்டதில் பெருமை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, அவரது நினைவிடத்தில் கும்பிடு போட்டதாகவும் அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்திருந்தார்.

அந்த விமர்சனத்துக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

“கலைஞர் கருணாநிதிக்கு கும்பிடு போடுவதில் தவறில்லை, ஒருவரின் காலில் விழுவதுதான் தவறு. சசிகலா நின்றால் 100 அடி தள்ளி உதயகுமார் நிற்பார்.

“திமுகவுக்கும் பாஜகவுக்கும் சித்தாந்தம் வேறென்றாலும் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழகத்துக்கு செய்த பணிக்காக அவரது நினைவிடம் சென்று கும்பிடு போடுவதில் பெருமைதான். அதை சிறுமையாக பார்க்கவில்லை.

“வாஜ்பாய் ஆட்சியில் எங்களின் கூட்டணியில் திமுக ஐந்து ஆண்டுகள் இருந்துள்ளது. பாஜக குறித்து தவறாக தமிழகத்தில் பிரசாரம் செய்யப்படுகிறது. கட்சித் தொண்டர்கள் மக்களிடம் சென்று எடுத்துரைக்க வேண்டும் என்று கருணாநிதிதான் கூறினார்.

“80 ஆண்டுகள் அரசியல் அனுபவமும் 50 ஆண்டுகள் நேரடி அரசியல் அனுபவமும் கொண்டவர் கருணாநிதி. அவரின் நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு சென்றதைக்கூட கொச்சைப்படுத்துவது தவறு.

“அண்ணாவின் நினைவிடத்திலும் கும்பிடு போட்டுள்ளேன். கடவுள் நம்பிக்கையில் எங்களுக்கும் அவருக்கு ஆயிரம் வேறுபாடுகள் உள்ளன. ஜெயலலிதாவுக்கும் மரியாதை செலுத்துவேன்.

“யார் காலிலும் விழவில்லை, கம்பீரமாக நடந்து சென்று முதுகெலும்பு வளையாமல் மரியாதை செலுத்தி வந்ததில் பெருமைப்படுகிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்