சென்னை: பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவரின் வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக சமூக ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்ததாகவும் தீவிரவாத இயக்கத்தில் இணையுமாறு இளையர்களை மூளைச்சலவை செய்ததாகவும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஃபைசல் ஹூசைன்.
இவரைக் கடந்த இரு தினங்களுக்கு முன்னர்தான் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இந்நிலையில் அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அவர்களுடன் வங்கி அதிகாரிகள் சிலரும் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச்சோதனை நடவடிக்கை பலமணி நேரங்களுக்கு நீடித்ததாகவும் பல்வேறு பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக இந்திய அரசுக்கு எதிராக சதிச்செயல்களில் ஈடுபட ரகசிய கூட்டங்களை நடத்திய குற்றச்சாட்டின்பேரில் சென்னையைச் சேர்ந்த ஆறு பேரை காவல்துறையினர் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே, கோவில் விழாவுக்காக நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தபோது அவை வெடித்துச் சிதறியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்தும் என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் ஒன்பது மாத கைக்குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசு தயாரிக்கவும் வெடிமருந்துகளை வைத்திருக்கவும் பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. அவை எவ்வாறு மீறப்பட்டன, கோவில் விழாவுக்காக எதற்காக நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க வேண்டும்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.