தமிழகத்தில் இரு வாரங்களில் 1,577 ரவுடிகள் கைது

தமிழகத்தில் இரு வாரங்களில் 1,577 ரவுடிகள் கைது

2 mins read
f4298b6c-431b-49f2-927e-a35757fa0b52
மொத்தம் 52,279 பேர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களுள் 1,577 ரவுடிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். - கோப்புப்படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் குற்றச்செயல்களை முன்கூட்டியே தடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அதிரடிச் சோதனையில் 1,577 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் தடுக்கும் நோக்கில் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, காவல்துறை தலைவர் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் கடந்த ஜூலை 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் சிறப்புக் கண்காணிப்பு, சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த 14 நாள் அதிரடி வேட்டையில், குற்றப்பின்னணி கொண்டவர்கள், சந்தேகப் பேர்வழிகள் என மொத்தம் 52,279 பேர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுள் பல்வேறு சட்டவிரோத, குற்றச்செயல்களில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்ட 1,577 ரவுடிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

மேலும், நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த, பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகளை நிறைவேற்றும் நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டது. இதன்மூலம் ரவுடிகள், தொடர் குற்றவாளிகள்மீது நிலுவையில் இருந்த 3,288 பிடியாணைகள் அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இது ஒருபுறம் இருக்க, மாநகரக் காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், சிறப்புப் பிரிவு அதிகாரிகள், ரவுடிகள், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், சமூக விரோதிகள் மீது தொடர் கண்காணிப்பை அதிகரிக்கும்படியும் வழக்கமான சோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள், தீவிர கண்காணிப்பு மூலம் குற்றச்செயல்களை முன்கூட்டியே தடுத்து, சட்டம், ஒழுங்கை சிறப்பாகப் பராமரிக்க வேண்டும் என்றும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை குற்றவாளிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சட்டம், ஒழுங்குபராமரிப்புகுற்றச்செயல்காவல்துறைசோதனைகண்காணிப்பு