சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 தொன்மையான கோயில்களுக்குள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) முதல் கைப்பேசி, புகைப்படக் கருவி, ஒலிப்பதிவுக் கருவி, மடிக்கணினி உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்ல முடியாது.
கோயில்களின் புனிதத் தன்மை, ஆன்மிகச் சூழலைப் பாதுகாக்கும் வகையில், கோயில்களுக்குள் கைப்பேசியைப் பயன்படுத்துவதற்கு ஏற்கெனவே தடை உள்ளது.
எனினும், புகைப்படம், காணொளி, செல்ஃபி, ரீல்ஸ் உள்ளிட்டவற்றை மக்கள் பதிவுசெய்வதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் 52 கோயில்களில் பொதுமக்கள் கைப்பேசி உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களைக் கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கோயிலுக்குள் செல்லும் முன்னர் மக்கள் தங்களது கைப்பேசி, மின்னணுச் சாதனங்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல்ல நுழைவாயில், காலணி பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் பாதுகாப்புப் பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு ரூ.5 கட்டணத்தில் மின்னணுச் சாதனங்களை வைக்கலாம். பாதுகாப்புப் பெட்டகங்களில் மக்களின் உடைமைகளை முறையாகப் பெற்று, ரசீது வழங்கி, தரிசனம் முடிந்து திரும்பும்போது அவற்றை ஒப்படைக்கும் வகையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, கோயில் நுழைவுப் பகுதிகளில் பக்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடெங்கும் ஏராளமான வகையான கோயில்கள் உள்ளன. அக்கோயில்களில் அன்றாடம் உள்ளூர், வெளியூர் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் செல்கின்றனர்.
கைப்பேசியின் வளர்ச்சியால் கோயிலுக்கு உள்ளே சத்தமாகக் கைப்பேசியில் பேசுவதில் தொடங்கி, புகைப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்ட கருவறையில் அத்துமீறி புகைப்படம் எடுப்பது, அங்கு பணி செய்யும் அர்ச்சகர், ஊழியர்களுடன் ஏற்படும் தகராற்றைப் படம்பிடிப்பது என பலவிதமான சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இது கோயில்களின் புனிதத் தன்மையையும் ஆன்மிச் சூழலையும் பாதிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கைப்பேசி முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ள கோயில்கள் பட்டியலில் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், மதுரை கள்ளழகர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில், சென்னை வடபழனி ஆண்டவர் கோயில், சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், பவானி சங்கமேஸ்வரர் கோயில், தஞ்சாவூா் பிரகதீஸ்வர சுவாமி கோயில், தென்காசி திருக்குற்றால நாத சுவாமி கோயில், வடலூர் சத்யஞான சபை வள்ளலார் தெய்வநிலையம் உள்ளிட்ட கோயில்கள் இடம்பெற்றுள்ளன.


