சென்னை: அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்கள்மீது தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
கைதுசெய்யப்பட்ட ஞானசேகரன், அந்தப் பெண்ணிடம் கூறிய ‘அந்த சார்’ என்று யாரைக் குறிப்பிட்டார் என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகளிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் கொடுக்கலாம். அதைவிடுத்து மலிவான செயலில் ஈடுபட வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
பேரவையில், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.
மேலும் அவர், இதுகுறித்து உண்மையான அக்கறையோடு பல உறுப்பினர்கள் பேசினர். இதைப் பயன்படுத்தி இந்த ஆட்சியின் மீது தவறான எண்ணத்தை உருவாக்கும் நோக்கத்தோடும் சில உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள்.
யாருக்கு என்ன நோக்கம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று அவருக்கு சட்டப்படி நியாயத்தைப் பெற்றுத்தர வேண்டும், என்பதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார்.