சென்னை: தமிழக அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை அதிகரித்ததாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நடப்பாண்டில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் புதிதாகச் சேர்ந்திருப்பதாகத் தெரியவந்தது.
தமிழ்நாடு முழுவதும் 37,553 அரசுப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் இம்மாதம் 1ஆம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது.
பெரும்பாலும் முதலாம் வகுப்பில்தான் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள்.
மாணவர் சேர்க்கை தொடங்கிய 20 நாள்களுக்குள் 14 வேலை நாள்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இது அதிகமாகும்.
கோடைக் காலம் முடிந்த பிறகே அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் மாணவர் சேர்க்கைக்கு நிறைய அவகாசம் உள்ளது.
கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் ஏறக்குறைய 3.34 லட்சம் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்தனர். இந்த ஆண்டு 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மார்ச் 20ஆம் தேதி ஒரே நாளில், தமிழகம் முழுவதும் 8,000 புதிய மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதன் மூலம் நடப்பாண்டில் இதுவரை 106,268 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.