சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் மாணவர் அமைப்பு சார்பாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) போராட்டம் நடைபெற்றது.
அப்போது ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற இளையர்கள் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்தியக் கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகியதை அடுத்து டெல்லியில் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. எனினும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வருகிறது.
சென்னையில் சில அமைப்பினருடன் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பினர் இணைந்து நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வற்புறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அரசு, நீட் தேர்வை ஏதிர்த்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆளுநர் மாளிகைக்கு அருகே போராட்டம் நடந்ததால் காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் தடுப்பு அரண்களைத் தாண்டிக் குதித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றபோது காவல்துறை அவர்களைக் கைது செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே, நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்துப் போராடிய மாணவர்களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசைக் கண்டித்தும் காங்கிரஸ், தவெக சார்பில் சென்னையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்ததும் அதில் பங்கேற்றவர்கள் டெல்லியில் நடந்த போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து அதைக் கொண்டாடும் விதமாக கையில் தீப்பந்தமும் மெழுகுவர்த்தியும் ஏந்திச்சென்றனர்.

