சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.
“இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குளறுபடிகள் உள்ளதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்,” என வழக்கறிஞர் வரலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) கடிதம் அனுப்பி இருந்தார்.
அதில், வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் மற்றொரு நபரும் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில், வழக்கறிஞர் வரலட்சுமி தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதேபோல் மற்றொரு வழக்கறிஞரான கிருஷ்ணமூர்த்தி என்பவரும் முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் வெளியிட்டதன் காரணமாக பெண்ணின் குடும்பம் மட்டுமின்றி, அனைத்து கல்வி நிறுவனங்களின் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதால் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.
இரு வழக்கறிஞர்களின் முறையீட்டையும் பெண் வழக்கறிஞர்களின் கடிதத்தையும் ஆய்வு செய்த நீதிபதிகள், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகரக் காவல் ஆணையர், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27)ல் நடைபெற இருந்த அதிமுகவினரின் ஆர்ப்பாட்டம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்திற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
குற்றவாளிமீது எட்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு
அண்ணா பல்கலைக்கழக மாணவியின் புகாரின் பேரில், ஏற்கெனவே நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் நான்கு பிரிவுகளின்கீழ் கைதான குற்றவாளி ஞானசேகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருவா்தான் குற்றவாளி: காவல் ஆணையா்
இந்தச் சூழலில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொழில்நுட்பக் கோளாறால் எப்.ஐ.ஆர். வெளியானதாக சென்னை காவல் ஆணையர் ஏ.அருண் விளக்கம் அளித்துள்ளார்.
இதுவரை நடைபெற்ற புலனாய்வில் வழக்கில் ஞானசேகரன் ஒருவா்தான் குற்றவாளி. சம்பவம் நடந்தபோது ஞானசேகரன் ஒருவருடன் கைப்பேசி மூலம் பேசியதாக தகவல் பரவுகிறது. ஆனால், அது உண்மை அல்ல.
ஏனெனில், சம்பவம் நடந்தபோது கைப்பேசியை ‘ஃபிளைட் மோடில்’ ஞானசேகரன் வைத்துள்ளாா். அவா் மாணவியை மிரட்டுவதற்கும், பயமுறுத்துவதற்கும் பொய்யாக கைப்பேசி மூலம் ஒருவரிடம் பேசுவதுபோல நாடகமாடியுள்ளாா் என்று காவல் ஆணையர் கூறியுள்ளார்.