மேடையில் கண் கலங்கிய மாணவி: இலவச வீடு கட்டித்தர உத்தரவிட்ட ஸ்டாலின்

மேடையில் கண் கலங்கிய மாணவி: இலவச வீடு கட்டித்தர உத்தரவிட்ட ஸ்டாலின்

படம்: ஊடகம்

26 Sep 2025 - 8:05 pm

1 mins read

சென்னை: அரசு விழாவில் தனது ஏழ்மை நிலை குறித்து கண்ணீர் மல்கப் பேசிய மாணவிக்கு அரசு சார்பில் இலவச வீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்மையில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி தமிழக அரசின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பிரேமா என்ற மாணவி பேசும்போது, கடும் எதிர்ப்பையும் மீறி தன்னைத் தனது தந்தை படிக்க வைத்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும், தனது தந்தை மழை பெய்தால் ஒழுகும் வீட்டில் வசித்து வருவதாகவும் அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மாணவி பிரேமா இவ்வாறு பேசிய 24 மணிநேரத்தில், அவருக்குத் தமிழக அரசு இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“இனி ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு வேண்டாம். எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள். உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் ‘கருணாநிதி கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்,” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மாணவி