வேலூர்: தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சிலர் பேருந்துப் படிக்கட்டில் பயணம் செய்வது, வகுப்பறையில் நடனம் ஆடுவது, ஆசிரியர்களை மிரட்டுவது போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் அவலப்போக்கு காணப்படுகிறது. இந்தச் சூழலில், மாணவர்கள் முடிவெட்டும்போது தலைமுடியில் கோடு போடுதல், 'பாக்ஸ் கட்டிங்', 'ஒன் சைடு', 'வி கட்', 'ஸ்பைக்' போன்ற சிகை அலங்காரத்துடன் பள்ளிக்கு வருகின்றனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இதுபோன்ற அலங்காரங்களைத் தவிர்த்து, பள்ளிச் சூழலுக்கு ஏற்ப சிகை அலங்காரம் செய்யுமாறு மாணவரிடம் அறிவுறுத்தப்பட்டது. மாணவர்களுக்குக் கண்டபடி முடி அலங்காரம் செய்யக்கூடாது என்று கடைக்காரர்களுக்கு வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், அரையாண்டு விடுமுறைக்குப்பின் பள்ளி திரும்பிய மாணவர்கள் பலர் விதவிதமான முடிவெட்டுடன் பள்ளிக்கு வந்ததைக் கண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களை எப்படிக் கண்டிப்பது, அறிவுரை வழங்குவது என்பது தெரியாமல் ஆசிரியர்கள் திகைத்துப்போய் நிற்கின்றனர். துணிச்சலான ஆசிரியர்கள் சிலர், மாணவர்களிடம் பணம் கொடுத்து முடிதிருத்தும் கடைக்கு அனுப்பிவைத்து, சொந்த செலவில் முடிவெட்ட வைத்துள்ளனர். தனியார், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் இதுபோன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவது குறைவாக உள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்வரை இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது.
அச்சுறுத்தும் சிகை அலங்காரம்; ஆசிரியர்கள் அதிர்ச்சி, குழப்பம்
1 mins read
விதவிதமான சிகை அலங்காரத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள். படம்: தமிழக ஊடகம் -

