சென்னை: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவின்போது மாணவர்கள் சிலர் தவெக தலைவர் விஜய்யின் படத்தையும் அக்கட்சிக் கொடியையும் உயர்த்திக் காட்டியதால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து அம்மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சி நடந்த அரங்கிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் அனைவரும் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம்.
வெள்ளிக்கிழமை (ஜூன் 27) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார்.
முன்னதாக அரங்குக்குள் வந்த சில மாணவர்கள் திடீரென தவெக கட்சிக் கொடியையும் அக்கட்சித் தலைவர் விஜய் படத்தையும் உயர்த்திக் காட்டினர்.
தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தீவிர சோதனைக்குப் பின்னரே அனைவரும் அனுமதிக்கப்படுவர். சோதனை முறையாக இருந்திருந்தால் தவெக கொடி கொண்டு சென்றது தடுக்கப்பட்டிருக்கும். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைகள் உள்ளனவா எனும் கேள்வி எழுந்துள்ளது.
கடும் சோதனை நடக்கும் இடத்தில் தவெக கொடியுடன் மாணவர்கள் சென்றது எப்படி என்பது குறித்தும் அவர்கள் தவெக தொண்டர்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.