சென்னை: தமிழகத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் தொடங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு ஏறக்குறைய 84.32 லட்சம் பெண் பயணிகள் நேரடியாகப் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் போக்குவரத்து மேம்பாடு, மகளிர் சுயசார்பை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது.
மாநிலப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்தம் 18,413 பேருந்துகளில், ஏறக்குறைய 69 விழுக்காட்டுப் பேருந்துகள் (12,692 பேருந்துகள்) இத்திட்டத்தின்கீழ் கட்டணமில்லாச் சேவையை வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் கிராம, நகரப் பகுதிகளில் வாழும் பெண்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ள முடியும்.
குறிப்பாக, உயர்கல்வி பயிலும் மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும் பணிக்குச் செல்லும் பெண்கள் தங்களது அன்றாடப் பயணச் செலவைக் குறைக்கவும் இத்திட்டம் பெரிதும் உதவும்.
மேலும், மருத்துவம், அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
மகளிரின் சமூக, பொருளியல் வளர்ச்சியை மேம்படுத்துவதில் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றும் மாநிலம் முழுவதும் பொதுப் போக்குவரத்துச் சேவையை அனைவரும் எளிதில் அணுகுவதை இது உறுதி செய்யும் என்றும் அரசுத் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
