சென்னை: ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் ஆர். வீரமணி (84) மீதான போக்சோ வழக்கு, தமிழகத்தில் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
சிறார் உரிமை ஆர்வலர் அளித்த புகார், காணொளி ஆதாரங்களின் காரணமாக வீரமணி சிக்கியுள்ளார்.
தேனாம்பேட்டையில் வாடகைக்கு எடுத்த வீட்டில், வறுமை நிலையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளுக்குப் பணம், கைப்பேசி, ஆடம்பரப் பரிசுகளை வழங்கி அவர்களுடன் பாலியல் உறவில் அவர் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் வீரமணியின் உதவியாளர்கள் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன், பாலாஜி குளோபல் நிறுவன ஊழியர் கணேசன் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025 அக்டோபர் 6ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டபோதிலும், வீரமணிக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் காணொளிப் பதிவுகள் ஆறு ஆண்டுகள் பழமையானது என்றும் கூறி, காவல்துறை வழக்கைக் கைவிட முயன்றது. கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
எனினும், இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, தற்போது விசாரணை வேகம் எடுத்துள்ளது.
இதில் வீரமணிக்கு உதவியவர்கள், அவரிடம் பணம் பறிக்க முயன்ற கும்பல், இதில் தொடர்புடைய மற்றத் தொழிலதிபர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பான விரிவான அறிக்கையைத் காவல்துறையின் தனிப்படையினர் விரைவில் தமிழக முதல்வர் விஜய்யிடம் அளிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
