சென்னை: சென்னையில் சாலைகளில் திடீரென பள்ளம் தோன்றி வாகனங்களையும் மக்களையும் அச்சுறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
அவ்வகையில் நேற்று (சனிக்கிழமை) வடபழனியில் இருந்து கோடம்பாக்கம் செல்லும் ஆற்காடு சாலையில் திடீரென 3 முதல் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. நல்லவேளையாக இந்தச் சம்பவத்தில் வாகனங்கள் எதுவும் சிக்கிக் கொள்ளவில்லை.
சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துக் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து வாகனங்களைத் திருப்பி விடும் பணியில் ஈடுபட்டனர். பள்ளத்தை மூடி சமப்படுத்துவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளம் விழுந்த இடத்திற்கு அருகே மெட்ரோ ரயில் 4வது வழித் தடத் திட்டப் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் இடங்களின் அருகே இதுபோன்று சாலைகளில் பள்ளம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2023 செப்டம்பர் மாதம் தி.நகரில் மக்கள் அதிகம் கூடும் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. அதே ஆண்டு டிசம்பரில் கொரட்டூர் பட்டரவாக்கத்திலும் இதுபோன்று சாலையில் பள்ளம் ஏற்பட்டது.

