சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பக்த ஜனேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான பழங்கால செப்பேடுகள் உள்ளிட்டவற்றை, பழைய பொருள்களை வாங்கும் கடையில் விற்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மதீனா துணை போனதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த ஊர் கள்ளக்குறிச்சி, திருநாவலூர் தலமாகும். அங்குள்ள அருள்மிகு பக்த ஜனேஸ்வரர் திருக்கோயிலில் இருந்த சுந்தரர் காலத்து பொருள்கள், செப்பேடுகள், திருத்தேர் பாகங்களை உளுந்தூர்பேட்டை மாம்பாக்கம் பழனிவேல் என்பவர் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி மதீனா துணையுடன் பழைய பொருள்கள் விற்கும் கடையில் விற்றுள்ளார். அதைத் தடுக்கப் போன ஊர் மக்களை அவர் மிரட்டியுள்ளார்.
சுந்தரர் காலத்து செப்பேடுகள், பொருட்கள் விலை மதிப்பற்ற கால பொக்கிஷங்கள். இதனை காயாலன் கடையில் போடுவது என்பது திட்டமிட்டு கடத்துவதற்கு சமம். சுந்தரர் வரலாற்றை அழிக்கும் நாத்திக அரசின் நயவஞ்சகமாக இது இருக்குமோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.
கோயில் குடமுழுக்கு என்பதே கோயிலின் விலையுயர்ந்த மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களை திருடி அழிக்கத்தானோ என பல சிவனடியார்கள் கேள்வி எழுப்பிவரும் நிலையில் இந்த திருட்டு சம்பவமானது மக்களையும் சந்தேகப்பட வைத்துள்ளது.
இந்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி மதீனா மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்பே உள்ளன. இவரது கட்டுப்பாட்டில் 19 கோவில்கள் உள்ளன. அவற்றிலும் பல மோசடிகள் நடைபெறுவதாக பக்தர்கள் பேசி வருகின்றனர். இது குறித்து அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

